உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆசியாவின் அகோடா பட்டியலில் இடம் பெற்ற புதுச்சேரி நடந்து சென்று பார்க்க வேண்டிய நகரம் என புகழாரம்

 ஆசியாவின் அகோடா பட்டியலில் இடம் பெற்ற புதுச்சேரி நடந்து சென்று பார்க்க வேண்டிய நகரம் என புகழாரம்

ஆசியாவில் நடந்து சென்று பார்க்க வேண்டிய சிறந்த 5 நகரங்களை பட்டியலிட்டுள்ள அகோடா நிறுவனம், இந்தியாவிலிருந்து புதுச்சேரியை தேர்வு செய்துள்ளது. இது புதுச்சேரியின் தனித்துவமான நகர அமைப்புக்கும், அமைதியான வாழ்வியல் சூழலுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இந்த பட்டியலில் வியட்நாமின் ஹனோய் குறுகிய சாலைகள், ஜப்பானின் குரஷிகி சமவெளி பகுதிகள், மலேசியாவின் யுனொஸ்கோ பழைய கலாசார நகரம், தாய்லாந்தின் சியாங்கான் ஆற்றங்கரையோ ரம் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியின் பிரெஞ்சு பகுதி, நகரம் என்ற உணர்வை விட ஒரு மென்மையான அனுபவப்பாதை போலவே தோன்றுகிறது. நேர்த்தியாக அமைக்கப்பட்ட கட்டுப்பட்ட சாலை வடிவமைப்பு, மென்மையான மஞ்சள், இளஞ்சிவப்பு, வெண்மையான நிறங்களில் மிளிரும் பிரெஞ்சு காலனிய கட்டடங்கள், இருபுறமும் நிழல் விரித்து நிற்கும் மரங்கள் இவை அனைத்தும் இணைந்து, நடைப்பயணிகளுக்கு இதை ஒரு சொர்க்கமாக மாற்றுகின்றன என, அந்த பட்டியலில் புகழாரம் கூட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் காணப்படும் பரபரப்பு, அவசரம், சத்தம் ஆகியவற்றிலிருந்து விலகி, புதுச்சேரி அமைதியாக வாழும் கலாசாரத்தை கற்றுத் தருகிறது. குறைந்த போக்குவரத்து, ஒழுங்கான வீதிகள், நடைப்பயணிகளுக்கு உகந்த சூழல் இவை அனைத்தும், நகரத்தை காலடியில் அளந்து அனுபவிக்க விரும்புவோருக்கு ஏற்ற நகரமாக இருக்கிறது. அதனால் தான், அகோடா பட்டியலில் இந்தியாவில் இருந்து புதுச்சேரி மட்டும் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகளில் நடக்கும் போது, வாகனங்களின் இரைச்சலுக்கு பதிலாக கடல்காற்றின் நறுமணம், இலைகளின் சலசலப்பு, தொலைவில் ஒலிக்கும் சைக்கிள் மணி போன்றவை மட்டுமே காதில் விழுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கும் பழமையான கதவுகள், ஜன்னல்களில் தொங்கும் மலர்ச்செடிகள், காலத்தின் நினைவுகளை மவுனமாகக் கூறிச் செல்கின்றன. கடற்கரை சாலை, காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களுக்கு மூடப்படும் போது, அந்தப் பகுதி முழுவதும் அமைதியின் வாசம் பரவுகிறது. வங்காள விரிகுடாவின் நீல விரிவு கண் முன்னே விரிந்திருக்க, அலைகள் கரையை மெல்லத் தழுவும் ஒலி மனதை அமைதிக்குள் இழுத்துச் செல்கிறது. சூரிய உதயமும், அஸ்தமனமும், நடந்து செல்லும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தினை தருகின்றன. இதனால் தான் பார்க்கத் தவறக்கூடாத, மனதை அமைதிக்குள் அழைத்துச் செல்லும் ஒரு தனித்துவமான அனுபவ நகரமாக புதுச்சேரி திகழ்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள சூழ்நிலையில் இந்த அங்கீகாரம் புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை தானே...

யார் இந்த அகோடா

அகோடா என்பது ஒரு டிஜிட்டல் பயண தளம். உலகம் முழுவதும் உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்கள், விமானங்கள், செயல்பாடுகள் உள்ளிட்ட பல சேவைகளில் சிறந்த மதிப்புள்ள சலுகைகளை வழங்கி, குறைந்த செலவில் உலகத்தைப் பார்க்க அனைவருக்கும் உதவுகிறது. Agoda.comஇணையதளம் கொண்டுள்ளது. இதன் மொபைல் செயலி 39 மொழிகளில் கிடைக்கின்றன. மேலும், 24 மணி நேரமும், வாரம் முழுவதும் செயல்படும் வாடிக்கையாளர் ஆதரவு சேவையுடன், சிங்கப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ