புதுச்சேரி – காரைக்கால் மீனவர்கள் சட்டசபை முற்றுகை போராட்டம்
புதுச்சேரி: உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி – காரைக்கால் மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் சார்பில், ஊர்வலம் மற்றும் சட்டசபை முற்றுகைப் போராட்டம் இன்று (நவ.,21) நடந்தது. புதுச்சேரி, சிங்காரவேலர் சிலை அருகே துவங்கிய ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மாதா கோவில் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றது. இதில், மாநில விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், பைபர் படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்வியாபாரிகள் சங்கம், அனைத்துமீன் அங்காடி மீனவ பெண்கள், அனைத்து மீனவச் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை பெரியக்கடை போலீசார் மாதா கோவில் எதிரே பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். பின், மீனவ அமைப்புகள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பின்படியும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை 2019ன் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடல் வளம், சுற்றுச்சூழல், மீனவர் வாழ்வாதாரங்களையும் அழிக்க கூடிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இ.பி.சி., பட்டியலில் உள்ள மீனவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.