10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி புதுச்சேரி வடக்கு அணி வெற்றி
புதுச்சேரி : 10 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் புதுச்சேரி வடக்கு அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7ம் தேதி துவங்கி சி.ஏ.பி., மைதானம் 4ல் நடந்து வந்தது. புதுச்சேரி வடக்கு, தெற்கு, மேற்கு, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.லீக் போட்டிகள் முடிந்த நிலையில் 16 புள்ளிகள் பெற்ற புதுச்சேரி மேற்கு அணியும், 14 புள்ளிகள் பெற்ற புதுச்சேரி வடக்கு அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.அதன்படி, நேற்று நடந்த இறுதி போட்டியில், முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுத்தது. வடக்கு அணியின் சசிகுமார், ரமேஷ், வினோத் தலா 2 விக்கெட் எடுத்தனர்.தொடர்ந்து ஆடிய வடக்கு அணி 7.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 82 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வடக்கு அணியின் கில்பர்ட் 13 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். 27 ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த வடக்கு அணியின் சசிகுமார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வடக்கு அணிக்கு சாம்பியன் கோப்பையை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி முன்னாள் செயலர் சந்திரன் வழங்கினார்.2வது இடம் பிடித்த புதுச்சேரி மேற்கு அணிக்கு தொடர் ஒருங்கிணைப்பாளர் கலைமணி கோப்பையை வழங்கினார்.இதில், சி.இ.ஓ., ராஜு மேத்தா மற்றும் போட்டி நடுவர் ராம் மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.'தொடர் நாயகன்' மற்றும் 'சிறந்த பேட்ஸ்மேன் விருது' 385 ரன்கள் 4 விக்கெட் விழ்த்திய மேற்கு அணியின் ராஜா பெற்றார். 'சிறந்த பந்து வீச்சாளர் விருது' 13 விக்கெட் எடுத்த மேற்கு அணியின் அனித் ராஜுக்கும், 'சிறந்த ஆல் ரவுண்டர் விருது ' 319 ரன்கள் மற்றும் 9 விக்கெட் எடுத்த மேற்கு அணியின் ராகேஷிற்கும் வழங்கப்பட்டது.ஹாட்ரிக் விக்கெட் விருது காரைக்கால் அணியின் ராமதாஸ், சிறந்த விக்கெட் கீப்பர் விருது வடக்கு அணியின் வேல்முருகன் ஆகியோர் பெற்றனர்.