டில்லியில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி புதுச்சேரி அரசியல் கட்சியினர் பங்கேற்பு
புதுச்சேரி, : சட்டசபை தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் டில்லியில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம் புதுடில்லி துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிலையத்தில் நேற்று துவங்கியது. துவக்க விழாவில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் பங்களிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளர்களின் பதிவுச் சட்டங்கள், தேர்தல் நடத்தல் விதிகள் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கட்சி ரீதியாக பா.ஜ., வெற்றிச்செல்வம், இளங்கோவன், என்.ஆர் காங்., கோபி, ஆனந்தன், காங்., சுவாமிநாதன், சிவகணேஷ், தி.மு.க.,சேர்ந்த நடராஜன், முகமது குலம், அ.தி.மு.க., கமல் தாஸ் , சுரேஷ், ஆம் ஆத்மி சண்முகசுந்தரம், பகுஜன் சமாஜ் கட்சி பத்மராஜ் பங்கேற்றனர். இதுவரை இதுவரை 4,719 அனைத்து கட்சி ஆலோசனைகள் நடந்துள்ளன. இதில் 40 மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகள், 800 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 3,879 வட்டத் தேர்தல் அலுவலர்கள் ஆகியோரால் நடத்தப்பட்ட கூட்டங்கள் அடங்கும். இதில் மொத்தம் 28,000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடதக்கது.