| ADDED : ஜன 01, 2024 05:54 AM
புதுச்சேரி : புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், அலறல் சத்தத்துடன் கூடிய பைக்குகளில் ரேஸ் சென்ற நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடற்கரையில் கலை கட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இதனால் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் போலீசார் மிகுந்த அக்கறை காட்டினர்.அதே நேரம் நேற்று இரவு 9:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, கடலுார் சாலை, வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம், உழவர்கரை, வில்லியனுார், இ.சி.ஆரில் பைக்கில் பலர் சாகசம் செய்தனர்.அதிக சத்தம் கேட்கும் வெடிகளை வெடிக்க வைத்துக் கொண்டும், அலறல் சத்தம் எழுப்பும் சைலன்சர்களுடன் பைக் ரேசில் ஈடுப்பட்டனர். சிலர் சைடு ஸ்டேன்டை ேபாட்டபடி நெருப்பு பொறி பறக்க பைக்கை ஓட்டிச் சென்றனர்.பணிகளை முடித்து வீடு திரும்பிய மக்களும், கோவில், சர்ச்க்கு சென்ற மக்கள் சாலையில் அலறல் சத்தத்துடன் பைக் சாகத்தில் ஈடுப்பட்ட நபர்களை கண்டு அஞ்சி ஒதுங்கினர். சில இடங்களில் பொதுமக்கள் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமலும் சென்றனர்.சாலையில் போலீஸ் ஜீப்பை நிறுத்தி சைரன் விளக்குகளை எரிய வைத்திருந்தாலே, அலறல் சத்தத்துடன் ரேசில் ஈடுப்பட்ட ஆசாமிகளை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் பெரும்பாலான சாலைகளில் போலீசாரின் நடமாட்டம் முற்றிலும் இல்லாதது பொது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.