உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியால் கைமேல் பலன்

வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியால் கைமேல் பலன்

புதுச்சேரி 45 அடி ரோடு வெங்கட்டா நகர் அருகில் உழவர்கரை நகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன், 1.25 லட்சம் சதுரடியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், நடைபாதை தளம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், சிறிய நுாலகம், கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் மழை நீர் இந்த பூங்காவில் பெரிய குளம் போல் தேங்கி பூங்காவை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவியது. இப்பகுதி சதுப்பு நிலப்பகுதி என்பதால், மழை நீர் பூமியில் உறிஞ்சப்படாமல் பல நாட்கள் தேங்கி நிற்பது உழவர்கரை நகராட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உழவர்கரை நகராட்சி சார்பில், ரூ. 2.50 லட்சம் செலவில் 40 அடி ஆழம், 6 அடி அகலம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி கடந்தாண்டு கட்டப்பட்டது. நேற்று அதிகாலை கொட்டி தீர்த்த கன மழையால், பூங்காவில் பல ஆயிரம் லிட்டர் மழைநீர் வழக்கம் போல் சூழ துவங்கியது. அதே நேரத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் தொட்டியில் வேகமாக மழை நீர் வழிந்தோடி பூமியில் சேகரமானது. தொட்டியில் இருந்து கழிவு உபரி நீர் வாய்க்கால் வழியாக வெளியேறியது. ஒரே நாளில் பூங்காவில் மழை நீர் தேக்கமின்றி வழக்கம்போல் காணப்பட்டது. உழவர்கரை நகராட்சியின் முயற்சியால் மழைநீர் சேகரமானதுடன், பூங்கா சுத்தமாகி, கை மேல் பலன் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை