எலி காய்ச்சல் தடுப்பு பயிற்சி பட்டறை நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் மண்டல அளவிலான எலிக் காய்ச்சல் தடுப்பு பயிற்சி பட்டறை நிறைவு விழா நடந்தது.ஐ.சி.எம்.ஆர்., சார்பில் மண்டல அளவிலான எலிக்காய்ச்சல் தடுப்பு பயிற்சி பட்டறை, புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் கடந்த 6ம் தேதி துவங்கியது. இதில், அந்தமான் தீவு ஐ.சி.எம்.ஆர்., ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முருகானந்தம் நாகராஜன் பங்கேற்று பயிற்சி அளித்தார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொது சுகாதரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த 38 வல்லுனர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தொடர் செய்முறை, நடைமுறை விளக்கங்கள் மற்றும் கூட்டு விவாதங்களுடன் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் கண்டறியும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி பட்டறை நிறைவு விழா வி.சி.ஆர்.சி., இயக்குனர் மஞ்சு ராஹி தலைமையில் நடந்தது.தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை கூடுதல் இயக்குனர் சம்பத், இணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரியின் சமூக மருத்துவ துறை தலைவர் கவிதா வாசுதேவன், விழுப்புரம் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், அந்தமான் ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி மதனன், டில்லி தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரி துஷார் நானாசாஹேப் நாலே உட்பட பலர் பங்கேற்றனர்.