உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பைகளை மறுசுழற்சி செய்து சாலை போட ஊக்குவிக்கப்படும்: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

குப்பைகளை மறுசுழற்சி செய்து சாலை போட ஊக்குவிக்கப்படும்: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

புதுச்சேரி: 'எதிர்காலத்தில் வாகனங்கள் ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரையில், 3.88 கி.மீ., நீளத்திற்கு, ரூ.436 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது: பிரதமராக மோடி 2014ம் ஆண்டு பதவியேற்றவுடன் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்தார். அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம். உலக அளவில் சிறந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாட்டின் நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகின்றன. நாட்டில் குப்பைகளால் பெரும் பிரச்னை. நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து சாலைகள் போடுவதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், டில்லியில் ஏற்கெனவே குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் போட்டிருக்கிறோம். குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், கண்ணாடிகள், உலோகங்களை பிரித்தெடுத்து சாலைகள் அமைக்கப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சாலை உருவாக்கத்தில் 18 லட்சம் டன் நகராட்சி கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கழிவுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சாலைகள் போடுவதற்காக, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் எடுப்பதால் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. இது குடிநீர் பிரச்னையை தீர்க்கிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக நான் இருந்தபோது நம் நாட்டில் ஒரு மாநிலத்துக்கும் மற்ற மாநிலத்துக்கும் இடையே 24 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கலந்தாய்வு கூட்டம் நடத்தி 17 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகத்திற்கு இடையிலான நீர் பிரச்னை என்பது, நீர் பற்றாக்குறை என்பதாக இல்லை. இந்த இரு மாநிலத்திற்கும் உள்ள நீர் பிரச்னையை தீர்க்க அரசியல் ரீதியாக உறுதியான முடிவு எடுக்கும் நிலைதான் வேண்டும். உலக அளவில் நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் 4வது இடத்தில் உள்ளது. இதை, 3வது இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொழில் நிறுவனங்களில் 22 முதல் 24 சதவீதம், சேவைப் பிரிவுகள் 50 முதல் 54 சதவீதம், வேளாண் துறை மட்டும் 12 சதவீதம். அதனால் வேளாண்துறையை ஆற்றல் மற்றும் எரிசக்தி என்று பல்வேறு பிரிவாக மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நாட்டில் தற்போது 30 சதவீதம் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எதிர்காலம் என்பது ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். டிராக்டர் உற்பத்தியாளர்கள் நெகிழ்வான எரிபொருள், எத்தனால், சி.என்.ஜி., மற்றும் மின்சார இயந்திரங்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். மின்சார டிராக்டர்கள் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க உதவும். ஆட்டோ மொபைல் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், உலகில் இந்தியா மூன்றாம் இடத்தில் தற்போது இருக்கிறது. இந்தத் துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. இந்த பிரிவுதான் அதிகமான ஜி.எஸ்.டி., வரி வருவாயை கொடுப்பதாகவும், ஏற்றுமதிக்கான வாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கிறது. நாட்டில், கடந்த 2014ம் ஆண்டில் ரூ. 14 லட்சம் கோடியாக இருந்த ஆட்டோமொபைல் துறையின் அளவு 2025ம் ஆண்டில் ரூ. 22 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. ஜப்பானை விஞ்சி மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக நாடு மாறியுள்ளது. இந்தத் தொழில் 4.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது மற்றும் ஏற்றுமதித் துறைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. தமிழகம் அதிகம் பயன்பெறும் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தளவாடங்கள் செலவு தற்போது 10 சதவீதமாக உள்ளது. அதை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம்., கான்பூர் ஐ.ஐ.டி., ஆகியவை பரிந்துரை செய்துள்ளன. வரும் டிசம்பருக்குள் தளவாடங்கள் செலவை 9 சதவீதமாக குறைப்போம். இது நம்முடைய ஏற்றுமதியை ஒன்றரை மடங்கு உயர்த்தும். சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயலுக்கும் இடையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியில், 10 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை நகரத்துக்கு நல்லது. மேலும், சென்னை- பெங்களூரு விரைவு சாலையால் 2 மணி நேரத்தில் பெங்களூரு அடைய முடியும். இதைத் தவிர ரூ.600 கோடி மதிப்பிலான மதுரவாயல்-ஸ்ரீ பெரும்புதூருக்கும் இடையிலான 6 வழிச்சாலைக்கு ஜனவரி 2026ல் ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு இணைப்பு கிடைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி