புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 2 அமைச்சர்களை ஏனாம் அனுப்ப கோரிக்கை
புதுச்சேரி: அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பார்வையிட 2 அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஏனாம் அனுப்ப வேண்டுமென முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மோந்தா புயல் ஆந்திரா மாநிலத்தைத் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி பிராந்தியத்தின் ஏனாமில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், முதல்வர் உடனடியாக இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவையும் ஏனாமிற்கு அனுப்பி, புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் மேற்பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.