புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, சட்டசபையில் 16வது முறையாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. 12ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ. 13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றியும், பட்ஜெட் மீதான விவாதமும் நடந்து வந்தது.நிறைவு நாளான நேற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு ஆகியோர் தனி நபர் தீர்மானங்கள் கொண்டு வந்து, முன் மொழிந்து பேசினர்.அந்த தீர்மானத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, சட்டசபையில் 15 முறை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை அதிகார விடுதலை கிடைக்கவில்லை. புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது நிதிச்சுமை மற்றும் நிர்வாக அதிகாரம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிற மாநிலங்களைபோல் துரித நடவடிக்கை எடுக்க முடியாததால், அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை.புதுச்சேரிக்கு கடந்த 2007ம் ஆண்டு தனிக்கணக்கு தொடங்கப்பட்டது முதல் மத்திய அரசு பங்களிப்பு குறைந்து வருகிறது. 2017ல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்ட பின் சொந்த வருவாயில் மாநிலம் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்மாநிலத்திற்கு உடனடியாக நிர்வாக விடுதலை வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, மத்திய அரசை இந்த சட்டசபை வலியுறுத்துகிறது என, தீர்மானத்தை கொண்டு வந்தனர்.அப்போது, 'புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், நிதி கமிஷனில் சேர்ப்பது எல்லாம் மாநில அந்தஸ்து வந்தால் கிடைத்துவிடும் என, கூறிய சபாநாயகர் செல்வம், இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் பேசலாம் என அழைப்பு விடுத்தார்.தொடர்ந்து, தீர்மானத்தை ஆதரித்து எம்.எல்,ஏ., க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து, மாநில அந்தஸ்து பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.முதல்வர் ரங்கசாமி பேசுகையில், மாநில அந்தஸ்து பெறுவதுதான் அரசின் எண்ணம். அதுதான் மக்களின் எண்ணம். மாநில அந்தஸ்தை தொடர்ந்து கேட்டு வருகிறோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை பெற அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.அதையடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானங்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த சட்டசபை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். பின்னர், காலை 12:21 மணியளில் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு 15 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 16வது முறையாக நேற்று மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.