விரைவாக வருவாய்த்துறை சான்றிதழ் கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவாக ஆன்லைன் மூலம் வருவாய்துறை சான்றிதழ் வழங்கப்படுவதாக கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் குடியிருப்பு, பிறப்பிடம், வருமானம், சாதி மற்றும் வாரிசு சான்றிதழ் , பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை எளிமையாகவும், வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்கும் நோக்கில் சர்வீஸ் பிளஸ் இணைய தளம் https://serviceonline.gov.in வாயிலாக கடந்த 17.8.2026 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 16,500 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை இணைய வழியாக தெரிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு வந்து செல்லும் நிலை இல்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பின்வரும் சான்றிதழ்களை பொதுசேவை மையங்கள் வாயிலாக கட்டணமின்றி பெற்றுக் கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. குடியிருப்பு சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வி தேவைகளுக்கான வருவாய் துறை சான்றிதழ்களை எளிதில் பெறும் வகையில் பொதுசேவை மையங்களின் உதவியுடன் இந்த மாத இறுதியில் இருந்து பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எந்த வித சிரமமும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.