உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ரவுடிக்கு வெட்டு லாஸ்பேட்டையில் பயங்கரம்

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ரவுடிக்கு வெட்டு லாஸ்பேட்டையில் பயங்கரம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே ரவுடியை சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சண்முகாபுரம், சொக்நாதன்பேட்டையை சேர்ந்தவர் எலி (எ) தினகரன்,20. இவர், அதேப் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் பச்சையப்பன். இருவரும், கடந்த மே மாதம் அதேப் பகுதியில் காதல் விவகாரத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்களை தாக்கினர். அன்று மாலை சிறுவர்கள் இருவரும், தினகரன் மற்றும் பச்சையப்பனையும் சந்தித்து சமாதானம் பேசலாம் என கூறி, இருவரையும் மீனாட்சிபேட்டையில் உள்ள காலி மனைக்கு, அழைத்து சென்றனர். அங்கு, சிறுவர்களுக்கு ஆதரவாக லாஸ்பேட்டையை சேர்ந்த ரவுடி ஜாக் (எ) ஜாக்பால்,23; உள்ளிட்ட கும்பல், திடீரென தினகர் மற்றும் பச்சையப்பன் தரப்பினரை சரமாரியாக வெட்டினர். இது தொடர்பாக டி.நகர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து ஜாக் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று மாதத்திற்கு பின் ஜாக் உள்ளிட்ட 10 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் ரவுடி ஜாக் நேற்று மாலை லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தனது நண்பரின் மகள் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தார். பின், இரவு 7:00 மணிக்கு அங்கிருந்து புறக்காவல் போலீஸ் ஸ்டேஷன் வாசல் முன் நின்றிருந்த போலீஸ் அதிகாரியிடம் பேசிவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென வீச்சரிவாளுடன் ஜாக்பாலை மடக்க முயன்றனர். திடுக்கிட்ட ஜாக்பால் தப்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட முயன்றார். ஆனால், அதற்குள் அந்த கும்பல், ஜாக்பாலை, போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே மடக்கி முகம் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜாக்பாலை, போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே ரவுடியை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவலறிந்த எஸ்.பி., ரகுநாயகம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், ஜாக்பாலை வெட்டிய கும்பல், சிறப்பு அதிரடிப்படை போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெட்டுபட்ட ஜாக்பால் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !