பாறை ஓவியம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
அரியாங்குப்பம், : பாரதியார் பல்கலைக்கூடத்தில், நடந்த முகாமில், பாறை ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திராகாந்தி தேசிய கலை மையம் மற்றும் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து, பாறை ஓவியங்கள் வரையும் இரண்டு நாட்கள் முகாம் நடந்தது. பல்கலைக்கூட மணிமண்டபத்தில், மாணவர்கள் வரைந்த ஓவியங்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பல்கலைக்கூட முதல்வர் அன்னபூர்ணா தலைமை தாங்கினார். கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள், இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் இயக்குனர் கோபால் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக, பாஸ்கர் எம்.எல்.ஏ, அரசு செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்தியாவின் முக்கிய பாறை ஓவிய தளங்களில் காணப்படும், பொறிப்பு, செதுக்குதல், ஓவியங்கள், குறியீடுகள், சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு, நுண்கலை துறை மாணவ, மாணவிகள் வரைந்த ஒவியங்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நுண் கலைத் துறை தலைவர் பிரபாகரன் மற்றும் பல்கலைக்கூட பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.