உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு உதவி திட்டத்தில் புதுச்சேரி சேர்ப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி கிடைக்கும்

சிறப்பு உதவி திட்டத்தில் புதுச்சேரி சேர்ப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி கிடைக்கும்

புதுச்சேரி: மாநிலங்களின் சிறப்பு உதவி திட்டத்தில் புதுச்சேரியை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் உட்கட்டமைப்பினை மேம்படுத்த 200 கோடி ரூபாய் வரை கிடைக்கும். மத்திய அரசு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடியை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இந்த நிதியுதவி 50 ஆண்டு வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.புதுச்சேரியில் சட்டசபை இருந்தபோதிலும் இந்த சிறப்பு நிதியுதவி திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. யூனியன் பிரதேசமாக கருதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்.இந்நிலையில் யூனியன் பிரதேசங்களை சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மூலதன நிதியுதவியை இனி பெற முடியும். இது தொடர்பாக மத்திய அரசு புதுச்சேரி தலைமை செயலருக்கு அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சருக்கு நன்றி

இதற்கிடையில் டில்லியில் முகாமிட்டுள்ள அசோக்பாபு எம்.எல்.ஏ., சிறப்பு உதவி திட்டத்தில் புதுச்சேரியை சேர்த்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.அசோக்பாபு எம்.எல்.ஏ., கூறுகையில், 'புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறப்பு உதவி திட்டத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், மாநிலத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். சுற்றுலா உள்பட 40 வகையான உட்கட்டமைப்பு பணிகளை மாநிலத்தில் ஏற்படுத்த முடியும். திரைப்பட நகரம் உள்பட பெரிய திட்டங்களை கூட செயல்படுத்த முடியும். பிரதமர் மோடி, பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்றார். அதற்கு ஏற்ப பிரதமர் அறிவுறுத்தலின்படி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியை மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் இணைந்துள்ளார். அவருக்கு புதுச்சேரி மாநில மக்கள் சார்பில் நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை