| ADDED : நவ 13, 2025 06:50 AM
புதுச்சேரி: காமராஜர் கல்வி நிதியை விடுவிக்க வேண்டி எம்.எல்.ஏ., தலைமையில் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று முதல்வரிடம் மனு அளித்தனர். சென்டாக் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதி திட்டத்தில் அரசே கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், கல்லுாரி நிர்வாகங்கள் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நேரு எம்.எல்.ஏ., தலைமையில் சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் நாராயணசாமி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, காமராஜர் கல்வி நிதியை விடுவிக்க வேண்டி மனு அளித்தனர். அப்போது முதல்வர் ரங்கசாமி, காமராஜர் கல்வி நிதி திட்டத்திற்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக 2021--22ம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும். அடுத்த கட்டமாக 2022--23ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் நிதி வழங்கப்படும் என்றார். மேலும், கட்டணத்தை கேட்டு மாணவர்களுக்கு நெருக்கடி தர வேண்டாம் என, கல்லுாரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றார். அதனையேற்று எம்.எல்.ஏ., சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் மற்றும் பெற்றோர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.