பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 2.86 லட்சம் அபேஸ்
புதுச்சேரி : புதுச்சேரியில் பெண் உட்பட 3 பேரிடம் 2.86 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், டில்லியில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது.அதில், தங்கம் வந்துள்ளதாகவும், அதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறினார். அதை நம்பிய அவர், தனது வங்கி கணக்கில் இருந்து 2.13 லட்சம் ரூபாயை அனுப்பினார். பின், அந்த நபரை பற்றி விசாரிக்கும் போது, போலியான சுங்க அதிகாரி என, தெரியவந்தது.தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த நபர், பேஸ் புக்கில் வந்த லாட்டரி சீட் தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். விளம்பரத்தில் வந்த எண்ணை தொடர்பு கொண்டு, லாட்டரி சீட் வாங்கியுள்ளனர். அதனை அடுத்து, இவரை தொடர்பு கொண்டு மர்ம நபர், நீங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக, அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர் 55 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். வில்லியனுாரை சேர்ந்த நபர், 18 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம கும்பலிடம் ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.