ரூ. 500 மானிய விலை மளிகை பொருட்கள் வாங்க டெண்டர் 30 ஆயிரம் பேருக்கு மட்டும்
புதுச்சேரி: மானிய விலையிலான மளிகை பொருட்கள் வரும் 30ம் தேதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் இனிப்பு, பலகாரம் செய்வதற்கு வசதியாக கான்பெட் அங்காடியில், சர்க்கரை 1 கிலோ, செறிவூட்டப்பட்ட சன்பிளவர் ஆயில் - 3 கிலோ, துவரம் பருப்பு - 500 கிராம், வெள்ளை உளுந்து - 500 கிராம், கடலை பருப்பு - 500 கிராம், பச்சைப பருப்பு - 500 கிராம், பொட்டு கடலை - 250 கிராம், மைதா - 1 கிலோ, கோதுமை - 1 கிலோ, ரவை - 1 கிலோ ஆகிய ரூ. 1000 மதிப்புள்ள பொருட்கள், பொதுமக்களுக்கு ரூ. 500 மானிய விலையில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால், கான்பெட் பஜாரில் மானிய விலை பொருட்கள் இன்னும் வரவில்லை. இது குறித்து கான்பெட் நிர்வாகத்திடம் கேட்டபோது; மானிய விலையிலான பொருட்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 29ம் தேதி டெண்டர் பிரித்து அன்று இரவு அல்லது மறுநாள் 30ம் தேதி மானிய விலையிலான மளிகை பொருட்கள் விற்பனைக்கு வரும்.மொத்தம் 30 ஆயிரம் பேக்குகள் மட்டுமே வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், தட்டாஞ்சாவடி பஜாரில் மட்டுமே மானிய விலையிலான பொருட்கள் பேக் விற்பனை செய்யப்படும். கான்பெட் மூலம் ரூ. 1000 மதிப்பிலான பொருட்கள் வாங்கி பொதுமக்களிடம் ரூ. 500க்கு விற்பனை செய்யப்படும்.