உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உணவில் பல்லி விழுந்ததாக வதந்தி: 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

உணவில் பல்லி விழுந்ததாக வதந்தி: 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருபுவனை : மதகடிப்பட்டு நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் உணவில் பல்லி கிடந்ததாக வதந்தி பரவியதால் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதகடிப்பட்டு, பழைய காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி செங்கேணி, 58. இவர், நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த செல்வம் 53; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் செங்கேணி நேற்று விற்பனை செய்த இட்லி மற்றும் தோசைக்கு வழங்கிய சட்னியில் பல்லி இறந்து கிடந்ததாக வதந்தி பரவியது. அப்போது முன்விரோதம் காரணமாக செல்வம் 53, இட்லி கடை நடத்தும் செங்கேணியை தாக்கி, அவரிடம் தகராறு செய்தார். பின், பள்ளி மாணவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 25 பேரை திருபுவ னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து உணவில் விஷம் இல்லை என, தெரிவித்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் செல்வம் உள்ளிட்ட சிலர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 25 பேர் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் மருத்துவ குழுவினர் பரிசோதித்து பல்லி விழுந்ததாக கூறப்படும் உணவால் உடலில் விஷம் இல்லை என, தெரிவித்தனர். இது குறித்து திருபுவனை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அரும்பு, 70, என்ற மூதாட்டி சாப்பிட்ட இட்லி, தோசையை அங்கிருந்த கோழிகள் கொத்தி தின்றுள்ளன. அதில் ஒரு கோழி இறந்து கிடந்த பல்லியை மூதாட்டியின் தட்டில் வீசியது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ