செல்வமகள் சேமிப்பு சிறப்பு முகாம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் மூன்று நாட்களுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.புதுச்சேரி அஞ்சல் கோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கமால் பாஷா செய்திக்குறிப்பு:செல்வமகள் சேமிப்புத் திட்டம் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 1,45,820க்கு மேல் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் புதுச்சேரி வடக்கு, தெற்கு, திண்டிவனம், விழுப்புரம் மற்றும் செஞ்சி உபகோட்டங்கள் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தி கணக்கைத் துவங்கலாம்.இத்திட்டம் அதிக வட்டி விகிதமாக 8.2 சதவீதம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வைப்பு தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு '80 சி' இன் கீழ் ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு உயர் கல்வி நோக்கங்களுக்காக கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு முதிர்ச்சியடைகிறது. மேலும், 18 வயது நிரம்பிய பிறகு திருமணத்திற்கு 1 மாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குள் திருமணத்தின் போது கணக்கை முடித்துக்கொள்ளாம்.மேலும், புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள பகுதியில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் இன்று 21ம் தேதி, வரும் 28 ம்தேதி மற்றும் மார்ச் 10 ஆகிய மூன்று நாட்களுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளைத் துவங்குவதற்கான சிறப்பு முகாம்நடக்கிறது. இதையொட்டி, முக்கிய தபால் அலுவலகங்களான புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் மற்றும் செஞ்சியில் சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் அவலுார்பேட்டை, மேல்மலையனுார், அனந்தபுரம், ஒலக்கூர், கட்டளை, வல்லம், வீடூர், சோழம்பூண்டி, ஆழியர். ஒதியம்பட்டு, சேர்ந்தனுார், அற்பிசம்பாளையம் போன்ற ஊர்களில் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.கிளை தபால் அலுவலகங்கள் உட்பட அருகிலுள்ள அனைத்து தபால் அலுவகலங்களிலும் செல்வமகள் சேமிப்பு கணக்கை துவங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.