இருளர் குடியிருப்பு பகுதிகளில் அரசு செயலர் திடீர் ஆய்வு
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்புகளில் அரசு செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் ராஜன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் நேற்று மதியம் 12:00 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பாட்கோ மூலம் நடந்து வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி உடனடியாக பணியினை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பொது கழிப்பிடம், கோவில் கட்டுவதற்கு பட்டா மற்றும் இலவச மனைபட்டா கேட்டு கோரிக்கை வைத்தனர். அரசு செயலர் முத்தம்மா, இங்குள்ள குளத்தில் இருந்து அதிகப் படியான தண்ணீரை வெளியேற்றவும், பொது கழிப்பிடம் அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மனைப்பட்டா வழங்க துறை மூலம் இடம் தேர்வு செய்யப்படும் என்றார். தொடர்ந்து, அமட்டன்குளம் இருளர் பகுதிக்கு சென்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆய்வின்போது வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாறு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.