அரசு மழலையர் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு மழலையர் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் மனையியல் பிரிவின் கீழ் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய பாரமரிப்பு இன்றி உள்ள மழலையர் பள்ளியில் பாம்புகள் ‘விசிட்’ அடித்து வருவதால், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளியில் பாம்பு ஒன்று புகுந்ததால், அங்கிருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக ஆசிரியர்கள் மீட்டு வேறு அறைக்கு அழைத்துச்சென்றனர். அதன்பின் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியும் பாம்பு சிக்கவில்லை. மழலையர் பள்ளியில் பாம்பு நடமாட்டதால் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.