முதல்வருக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,க்கு சமூக ஆர்வலர் மனு
புதுச்சேரி : வீராம்பட்டினம் தேரோட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ரங்கசாமிக்கு பாதுகாப்பு கேட்டு, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேரோட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். விழாவிற்கு வந்த முதல்வர் ரங்கசாமிக்கு தேர் அருகில் நிற்க போதிய இடம் அளிக்கவில்லை. மேலும், போலீஸ் பாதுகாப்பு குளறுபடி காரணமாக முதல்வர் சற்று நிலை தடுமாறினார். இதேபோல், கடந்த 2 ஆண்டிற்கு முன், இதே தேரோட்டத்தின் போது பாதுகாப்பு அதிகாரி மோதியதில் முதல்வர் நிலை தடுமாறினர். கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், போலீசார் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தவறி வருவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் தேரோட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கவுள்ளனர். ஆகையால், விழாவில் பங்கேற்கும் முதல்வர் ரங்கசாமிக்கு, வில்லியனுார் தேரோட்டத்தில் நடந்தது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டி, டி.ஜி.பி., ஷாலினியிடம், சமூக ஆர்வலர் விஜயகுமார் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளார். முதல்வருக்கு பாதுகாப்பு கேட்டு, சமூக ஆர்வலர், டி.ஜி.பி.,யிடம் மனு கொடுத்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.