விரைவில் 327 அரசு பணியிடங்களுக்கு ஆணை: முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இயக்குநரகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினம் மற்றும் கேலோ புதுச்சேரி பரிசளிப்பு விழா, காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவ தனிநபர் மற்றும் அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாாட்டினர். விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘அரசு துறைகளில் 327 அரசு பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆணை வழங்கப்பட உள்ளன. அதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பணிக்கான ஆணையும் வழங்கப்பட உள்ளது. வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்காக தனி நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். விரைவில் அந்த வீரர்களுக்கு இந்த நிதியில் இருந்து பயணச் செலவுக்கான தொகையை சங்கங்களின் மூலம் வழங்க உள்ளோம். அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்போது, விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, அதற்கான ஒதுக்கீட்டில் அரசு பணி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் அமைச்சர் ராஜசேகரன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., விளையாட்டுத்துறை இயக்குநர் சுதாகர், திருவனந்தபுரம் தேசிய விளையாட்டு கழகத்தின் மண்டல இயக்குநர் சரத் சந்திர யாதவ் உட்பட பலர் பங்கேற்றனர்.