உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர் உதவியகங்களில் 25ம் தேதி சிறப்பு நிலப்பட்டா மாற்றம் முகாம்

உழவர் உதவியகங்களில் 25ம் தேதி சிறப்பு நிலப்பட்டா மாற்றம் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள உழவர் உதவியகங்களில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கான சிறப்பு நிலப்பட்டா மாற்றுதல் முகாம் நடைபெற உள்ளது. தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், வேளாண் தொழில்நுட்ப முகமை, விவசாயிகள் கவுரவு நிதித் திட்டம், பயறு வகைகளில் தன்னிறைவுத் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்குப் பணமாகவும், இடுபொருட்களாகவும் மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் தொடர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக உழவர் உதவியகங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், ஆதார் எண் மற்றும் புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் நிலமகள் இணையதளம் மூலம் பட்டா விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 2,500 விவசாயிகளுக்கு மத்திய விவசாயிகள் பதிவேட்டில் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா இல்லாத 7,000 விவசாயிகளின் தனிப்பட்ட விவரங்கள் மட்டும் ஆதார் மூலம் அறியப்பட்டு மத்திய வேளாண் அமைச்சக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலப்பட்டா இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்குத் திட்டப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க, அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கி மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி வேளாண் செயலர் ரவிப்பிரகாஷ் மற்றும் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் இணைந்து தலைமையேற்ற கூட்டத்தில், வரும் 25ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட உழவர் உதவியகங்களில் சிறப்பு நிலப்பட்டா மாற்றுதல் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த முகாமில், பட்டா மாற்ற விண்ணப்பத்துடன் கிரையப் பத்திரம், பாகப்பிரிவினைப் பத்திரம், விடுதலைப் பத்திரம், தானப் பத்திரம், உயில் சாசனம், பரிவர்த்தனைப் பத்திரம் மற்றும் அதற்கான மூலப் பத்திரங்கள், சொத்து உரிமையை உறுதி செய்யும் ஆவணங்கள், பழைய பட்டா, ஆதார் அடையாள அட்டை, நில வரி செலுத்திய ரசீது, நில வரைபடம் ஆகிய ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகளின் வரவேற்பைப் பொறுத்து இந்த சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து நடத்தவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இத்தகவலை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !