விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம்
வில்லியனுார்: புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில், நான்காவது வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புதுச்சேரி கல்வித்துறையின் விளையாட்டுத் துறை நான்கு வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, வில்லியனுார் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூனில் உள்ள 36 அரசு பள்ளிகள், 59 தனியார் பள்ளிகள் ஆகியன இணைந்து நான்காம் வட்டமாக பிரிக்கப்பட்டு, கடந்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்.இந்நிலையில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளை நடத்தும் பொறுப்பு தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளி துணை முதல்வர் மனோன்மணி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 75க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி விரிவுரையார்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.விளையாட்டு குழு செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் ரகு, விளையாட்டு போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பேசினார்.விளையாட்டுத் துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் மற்றும் விளையாட்டு போட்டிக்கான பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகள் குறித்து விளக்கினர். உடற்கல்வி விரிவுரையாளர்கள் முரளிதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியை ஷாலினி தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.