மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விருதுகள் தேர்வு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான 2026-ம் ஆண்டிற்கு மாநில விருதுகளுக்கான இறுதி தேர்வுக்குழு கூட்டம் இன்று (நவ.,26) நடந்தது. அமைச்சர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் சிறந்த மாற்றுத்திறனாளி பணியாளர்கள், தனியார் துறையில் பணிபுரியும் சிறந்த மாற்றுத்திறனாளி பணியாளர்கள், சிறந்த சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றும் சிறந்த தனிநபர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செயல்படும் சிறந்த நிறுவனம் ஆகிய பிரிவுகளின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில், விருதுக்குரிய நபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டது. கூட்டத்தில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை அமைச்சர் சிவக்கொழுந்து தலைமையில் பரிசீலனை செய்தனர்.