அரசு துறைகளின் ஆயத்த நிலை; கலெக்டர் ஆய்வு
புதுச்சேரி ; தொடர் மழை எதிரொலியாக கலெக்டர் குலோத்துங்கன் அரசு துறைகளின்ஆயத்த நிலை குறித்து ஆய்வு செய்தார்.வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் நாளை 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன்படி தொடர் மழையும் பெய்து வருகிறது.அதையடுத்து கலெக்டர் குலோத்துங்கன், மழை பாதிப்பு தொடர்பாகவும், அரசு துறைகளின் ஆயத்த நிலை குறித்தும் ஆய்வு நடத்தினார்.தொடர்ந்து நிவாரண முகாம்கள், துறை வாரியான கட்டுபாட்டு மையங்கள், எச்சரிக்கை கருவிகள், மீட்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள மாநில அவசர கால செயல் மையத்திலும் நேற்று காலை 9:00 மணியளவில் பார்வையிட்டார்.வானிலை தொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள், வருவாய் துறையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால உதவி குழுக்கள், மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை, தீயணைப்பு துறையின் தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.தொடர் மழை பாதிப்பிற்கு, அவசர கால செயல் மையத்தின் கட்டுபாட்டு துறையின் உதவி எண்கள்-112 மற்றும் 1077 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.