உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : லட்சுமிநாராயணன்
புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்களை கொண்டு, உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை தற்காலிக முறையில் பணியாற்றி வந்த 134 இளநிலை பொறியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணி நிரந்தரம் செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்களை கொண்டு, துறையில் காலியாக உள்ள 43 உதவி பொறியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் துறையில் இருந்து வந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, மேம்பாட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.