உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் சட்ட விரோத பார்க்கிங் அடாவடி கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் சட்ட விரோத பார்க்கிங் அடாவடி கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொழிற் பேட்டையில் போக்கு வரத்திற்கு இடையூறாக வும், சட்ட விரோதமாகவும் நிறுத்தப்படும் பஸ்கள், லாரிகள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தட்டாஞ்சாவடி தொழிற் பேட்டையில் 110 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிற்பேட்டைக்குள் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லும் வாகனங்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தொழில்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.

தொழிலாளர்கள் அவதி

இருப்பினும், கனரக வாகனங்களை, தொழிற்பேட்டை உட்புற சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சகட்டுமேனிக்கு பார்க்கிங் செய்கின்றனர். குறிப்பாக, பஸ், லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயில் உள்பட பல்வேறு இடங்களில் பல மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை யாருடையது என்பதே தெரியவில்லை. இவற்றை தினமும் எடுத்து ஓட்டுவதும் இல்லை. உரிமையாளர்கள் வந்து பார்ப்பதும் கிடையாது. பல மாதங்களாக நிற்கும் இந்த வாகனங்களால் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்வோர் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விபத்து அபாயம்

தட்டாஞ்சாவடி தொழிற்சாலைக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் உடனடியாக சரக்குகளை இறக்கிவிட்டு சென்றுவிட வேண்டும். தொழிற்பேட்டைக்குள் மணிக்கணக்கில் நிறுத்த அனுமதி இல்லை. இதுபோன்ற சூழலில், புதுச்சேரியின் வேறு ஏதேனும் பகுதிக்கு வரும் வாகனங்கள்கூட, ரெஸ்ட் எடுக்கும் இடமாக தொழிற்பேட்டை மாறி வருகிறது. சாலை சந்திப்புகளிலும், வளைவுகளிலும் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால், வளைவுகளில் திரும்பும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இது என்னபஸ் நிலையமா?

கொக்கு பார்க்கில் இருந்தும், கோரிமேடு சாலையில் இருந்தும் தொழிற்பேட்டை வழியாக பஸ்கள் புகுந்த செல்ல தடை உள்ளது. இப்படி புகுந்து செல்லும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், தொழிற்பேட்டைக்குள் புகுந்து செல்வதும், சட்ட விரோத பார்க்கிங்கும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் போக்குவரத்து துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் துணிச்சலாக தொழிற்பேட்டை வளாகத்தை சட்ட விரோத பார்க்கிங் செய்யும் இடமாக மாற்றி அடவாடி செய்து வருகின்றனர்.

இதுதான் காரணம்

நகர பகுதியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலை தொடர்ந்து மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் மட்டுமே வெளியூர் லாரிகள், பஸ்களை நிறுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் லாரிகள், பஸ்களை அவர்களுடைய ெஷட்டில் தான் நிறுத்த வேண்டும்.போக்குவரத்து முனையத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த 24 மணி நேரத்திற்கு 25 ரூபாய், பஸ்சிற்கு 35 ரூபாய், 6 சக்கர லாரிகள் போன்ற வாகனங்களுக்கு 45 ரூபாய் வரை சொற்ப பார்க்கிங் கட்ட ணம் தான் வசூலிக்கப்படு கிறது. இந்த சொற்ப தொகையை தர மறுத்து, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பஸ்கள், லாரிகள், வேன்களை சட்ட விரோதமாக பார்க்கிங் செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக தொழிற்பேட்டைக்குள் நுழையும் மற்றும் பார்க்கிங் செய்யும் அனைத்து வாகனங்கள் மீதும் போக்குவரத்து துறையும், வடக்கு போக்குவரத்து போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபராதம் விதிக்க வேண்டும்

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ராணி கிரேன்ஸ் எதிரே பி.ஓய்.01 டி.சி. 5290 பதிவெண் கொண்ட பஸ் ஒன்று தொழிற்பேட்டையின் பிரதான நுழைவு வாயிலை அடைத்து கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக பைக்குகள், கார்கள் கூட செல்ல முடியவில்லை. தொழிற்சாலைக்கு வரும் வாகனங்களும் சரக்குகளை இறக்க முடியவில்லை. சட்ட விரோதமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ள இந்த பஸ் மீது அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி