வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல்கலைக்கழக பட்ட சான்றிதழ் கிட்டாதோர் யுஜிசிக்கு இணையத்தில் புகார் அனுப்புக.
புதுச்சேரி: புதுச்சேரியில் பயிலும் மாணவர்கள் டிகிரி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலத்தோடு சான்றிதழ் வழங்க புதிய துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் டிகிரி சான்றிதழ் உள்பட அனைத்திற்கு கட்டணம் கட்டி செமஸ்டர் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வு ரிசல்ட் வெளியான பிறகு மாணவர்களுக்கு டி.சி.,யுடன் புரோவேஷனல் சான்றிதழ் மட்டும் உடனடியாக கிடைத்து விடுகின்றது. ஆனால் மிக முக்கியமான டிகிரி சான்றிதழ் காலத்தோடு கிடைப்பதில்லை. பட்டமளிப்பு விழா நடத்தி டிகிரி சான்றிதழ் தருகின்றோம் என் கூறியே பல ஆண்டுகளை ஓட்டிவிடுகின்றனர்.ஒவ்வொரு முறையும் கல்லுாரி சென்று டிகிரி சான்றிதழ்களை கேட்கும்போது, பல்கலைக்கழகத்தை கையை காட்டுவதும், பல்கலைக்கழக தேர்வு பிரிவு சென்று கேட்டால், கல்லுாரியை சென்று கேளுங்கள் என்று மாறி மாறி திருப்பி அனுப்புவதும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. இதனால் டிகிரி சான்றிதழ் கேட்கும் மாணவர்கள் நொந்துபோய் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். புதுச்சேரி அரசு காலிபணியிடங்களை நிரப்பி வருகின்றது. இதற்கு டிகிரி சான்றிதழ் அவசியம் தேவைப்படுகின்றது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லுவோர்களுக்கும் கட்டாயம் டிகிரி சான்றிதழ் அவசியம் தேவைப்படுகின்றது. ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை இல்லாமல் ஆமை வேகத்தில் தேர்வு கட்டுபாட்டு பிரிவு செயல்பட்டு வருவது மாணவர்களையும், பெற்றோர்களை அதிருப்திடைய செய்துள்ளது. தட்கல் முறையில் ரூ.1000 ரூபாய் கட்டினால் உடனடியாக டிகிரி சான்றிதழ் தரப்படும் என பல்கலைக்கழக தேர்வு பிரிவு சொல்லுகின்றது.இதனை நம்பி பணம் கட்டினால் அவ்வளவுதான். தட்கல் முறையும் ஒரு மாதத்தை தாண்டி செல்லுகின்றது. அப்புறம் எதற்கு தட்கல் முறை கொண்டு வரப்பட்டது என மாணவர்கள் விரத்தியாக கேள்வியை எழுப்பி வருகின்றது. காலத்தோடு டிகிரி சான்றிதழ் தராத பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் நடத்த மாணவர் சங்கங்கள் ரெடியாகி வருகின்றன. இவ்விவகாரத்தில் புதிய துணைவேந்தர் உடனடியாக தலையிட்டு டிகிரி சான்றிதழை காலத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக, இணைப்பு கல்லுாரி மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
பல்கலைக்கழக பட்ட சான்றிதழ் கிட்டாதோர் யுஜிசிக்கு இணையத்தில் புகார் அனுப்புக.