காமராஜர் மணி மண்டபத்தில் இயங்காத மின் விசிறிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அவதி
புதுச்சேரி : காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த ஓவியப்போட்டியின்போது மின் விசிறிகள் இயங்காததால், மாணவர்கள் அவதியடைந்தனர்.புதுச்சேரி காமராஜர் ஓவியக் கலைக்கூடம் சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது.காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி நடந்த கண்காட்சி அரங்கில் உள்ள 9 மின் விசிறிகளில் ஒன்று கூட இயங்கவில்லை. இதனால், கடும் வெயிலின் புழுக்கத்தால் மாணவர்கள், அவதியடைந்தனர்.காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை நடந்த போட்டியில் மாணவர்கள் வியர்வையில் நனைந்தபடியே ஓவியத்தை வரைந்து முடித்தனர்.தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., காமராஜர் மணிமண்டபத்திற்கு வந்து, கண்காட்சி அறை யை பார்வையிட்டார்.அவர் கூறுகையில், 'புதுச்சேரியில் பல கோடி ரூபாய் செலவு செய்து, மண்டபத்தை அமைத்து, பொதுமக்களுக்கான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து விட்டனர் என்ற எண்ணத்தில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கு, தேவையான அடிப்படை வசதிகளை செய்து இருக்க வேண்டும். மணி மண்டபத்தில் காற்று வசதியே செய்யப்படவில்லை. அங்கு, உள்ள மின்விசிறிகள் இயங்காததால், மாணவர்கள் அவதிப்பட்டனர். எனவே, மின் விசிறிகளை சரி செய்து, ஏ.சி., அறைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.