| ADDED : ஜன 27, 2024 06:38 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் உரிய நேரத்தில் தேசிய கொடியேற்றாததால் மாணவர்கள் அவதியடைந்தனர் என, நேரு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டினார்.அவரது அறிக்கை;நாடு சுதந்திரம் பெற்று 75ம் ஆண்டு நிறைவு செய்திருந்தாலும், புதுச்சேரி பல நிலையில் பின்தங்கி உள்ளது. மாநில அந்தஸ்து உரிமை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், குடியரசு தினத்தில் உரிய நேரத்தில் கொடியேற்ற முடியாத நிலை உள்ளது.மத்திய அரசு புதுச்சேரிக்கு நிரந்தர கவர்னர் நியமிக்காமல், மூன்றரை ஆண்டுகள் வேறு மாநில கவர்னரை வைத்து வழி நடத்துவதால் பல நிலைகளில் புதுச்சேரிக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக பணியாற்றுவதால், புதுச்சேரி மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்த முடியாதவராக உள்ளார். நாடு முழுதும்காலை 8:00 மணிக்கு குடியரசு தின விழா துவங்கினாலும் புதுச்சேரியில் கவர்னருக்காக காத்திருந்தனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து அலங்கார உடை அணிந்து பள்ளிக்கு சென்று அங்கிருந்து விழா மேடை அருகே வந்த பள்ளி மாணவ மாணவிகள் கவர்னருக்காக பல மணி நேரம் காத்திருந்தனர். மதியம் 1:00 மணிக்கு வெயிலில் கடும் சிரமத்துடன் கலை நிகழ்ச்சியில் ஈடுப்பட்டு, சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றனர். இதை கவர்னர் உணர வேண்டும். வரும் காலத்தில் குடியரசு தின மாண்பை காக்கும் வகையில் உரிய நேரத்தில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.