உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டருக்கு, ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்ற டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு விஜயகணேசர் திருமண மண்டபத்தில், சுற்றியுள்ள 20 டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் நடந்தது.மாவட்ட மேலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை யொட்டி மது விற்பனையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதையறிந்த கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார், கூட்டம் நடந்த மண்டபத்திற்கு வந்து, டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் கைமாற்றப்படுகிறதா என ரகசியமாக கண்காணித்தனர். மாலை 4:00 மணியளவில் கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட மேலாளர் செந்தில்குமார், உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்திடம் ரூ.25 ஆயிரம் பணம் கொடுக்க முயன்றனர்.உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.. சத்தியராஜ் தலைமையிலான போலீசார், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார், உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ. 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !