உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா துவங்கியது

வில்லியனுார் லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா துவங்கியது

வில்லியனுார் : வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தில் 148வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய ஆண்டு திருவிழா, ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு 148வது திருவிழா நேற்று காலை 5:30 மணிக்கு நடந்த கூட்டு திருப்பலிக்கு பிறகு, கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா ஏற்றி துவக்கி வைத்தார்.திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடக்கிறது. வரும் 4ம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணியளவில் புதுவை - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு மேல் வைரகிரீடம் சூட்டப்பட்டு மாதா ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. 5ம் தேதி காலை 6:30 மணி திருப்பலிக்கு பின், கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை திருத்தல அருட் தந்தையர்கள் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, அலெக்சிஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் சூசைமியநாதன் டொமினிக், பொருளாளர் தர்மதுரை, செயலர் ஜெயராஜ், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ