உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் எடுத்த முயற்சிக்கு... கைமேல் பலன்; விநாயகர் சிலை கரைப்பில் மாசு குறைந்தது

மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் எடுத்த முயற்சிக்கு... கைமேல் பலன்; விநாயகர் சிலை கரைப்பில் மாசு குறைந்தது

புதுச்சேரி: விநாயகர் சிலை கரைப்பில் அரசு எடுத்த புது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.இந்தாண்டு சிலை கரைப்பில் மாசு பெருமளவு குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் 27ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் பூஜை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கடந்த 31ம் தேதி பழைய நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. ஆண்டுதோறும், பூமாலைகள், துணிகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பூஜை பொருட்களுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். இதனால் கடல் நீர் பெரிதும் மாசுபடும். இந்த ஆண்டு மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் புதுயுக்தியை கையாண்டது. விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அருகில், மாலைகள், துணிகள், குடைகள், பூஜைக்குரிய பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியாக சேகரிக்கப்பட்டது. பூமாலைகள், பிள்ளையார்க்குப்பத்தில் சவுக்கு நாற்றங்காலுக்கு உரமாக மாற்றப்பட்டது. துணிகள், தர்மாகோல் குடைகள் துத்திப்பட்டில் உள்ள நிகேஷ் எண்டர்பிரைசஸ்சில் பதப்படுத்தப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள், குரும்பாம்பட்டில் உள்ள பாலி பேக் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டது. மாசு பொருட்கள் கடலில் கலப்பது இந்தாண்டு தவிர்க்கப்பட்டதால், சிலைகள் கரைக்கப்படும் கடல் பகுதியில் ஆக்சிஜன் அளவு குறைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரிய வந்துள்ளது. ஆக்சிஜன் அளவு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு முன், ஆக., 20ம் தேதி பழைய நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆக்சிஜன் அளவு 6.1 மில்லி கிராம் இருந்தது. விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 2 தேதியன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் ஆக்சிஜன் அளவு 6.1 மில்லி கிராம் இருந்தது. சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு முன்பு 29.08.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு 6.4 மில்லி கிராம் இருந்தது. விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதற்கு பிறகு இந்த அளவு 5.8 மில்லி கிராம் ஆகக் குறைந்தது. ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கில் கடலில் விடப்படும் மாலைகள் அழுகி மக்கத் தொடங்கும் போது கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து விடும். இந்த ஆண்டு பூமாலைகள் தனியாக சேகரிக்கப்பட்டதால், ஆக்ஸிஜன் அளவு 6.1 மில்லி கிராம் என்பதில் மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கடல் நீரின் தரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மிதவை துகள்கள் சென்ற ஆண்டு மிதவைத் துகள்களின் அளவு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு 17.09.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் லிட்டருக்கு 201 மில்லி கிராம் இருந்தது. அதிக மிதவைத் துகள்கள் இருந்தால் சூரிய ஒளிச்சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு குறையும். இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு கடந்த 2ம் தேதி நடத்திய ஆய்வில் மிதவைத் துகள்களின் அளவு லிட்டருக்கு 10 மில்லி கிராம் மட்டுமே இருந்தது. விநாயகர் சிலைகளோடு கொண்டுவரப்பட்ட, அனைத்து அலங்காரப் பொருட்களும் கடலில் கரைப்பதற்கு முன்பாக சேகரிக்கப்பட்டதால், மிதவைத் துகள்களின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. 'கடலில் மாசு கட்டுபாட்டை குறைக்க புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் எடுத்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது' என உறுப்பினர் செயலர் ரமேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை