மேலும் செய்திகள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
25-Aug-2025
பிரெஞ்சியர் ஆட்சி காலத்தில் சாமானிய பொதுமக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்ததுஎன்றால், அது பணக்காரர்கள் வாழ்ந்த சொகுசு கண்ணாடி பங்களா... ஏழைகள் குடிசைகள், ஓடு போட்ட வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்க, செல்வந்தர்களோ தங்களுடைய ஆடம்பரத்தையும், செல்வாக்கையும் காட்ட இதுபோன்ற சொகுசு கண்ணாடி பங்களாவை தோட்டத்துடன் அமைத்து வாழ்த்து வந்தனர். நகர பகுதியிலும் இதுபோன்ற கண்ணாடி பங்களாக்கள் அக்காலத்தில் நிறையவே இருந்தன. சுய்ப்ரேன் வீதியில் ஒரு கண்ணாடி பங்களா, மகாத்மா காந்தி சாலையில் பெத்தி செமினார் பள்ளி எதிரே இருந்த கண்ணாடி பங்களாக்கள் பிரசித்தி பெற்றவை. நகர பகுதிக்கும் வரும் பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் வச்ச கண் வாங்காமல் சென்றதில்லை.ஆனால், புதுச்சேரி நகரின் எல்லா கண்ணாடி பங்களாவுக்கும் மணிமகுடமாக கருவடிக்குப்பத்தில் 1827ல் ஈடன் வில்லா கண்ணாடி பங்களா கட்டப்பட்டு இருந்தது. பிரெஞ்சியர் காலத்தில் செல்வந்தராக இருந்த சின்னயா முதலியார், 10 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்து நடுவில் இந்த கண்ணாடி பங்களாவை கட்டி இருந்தார். அந்த மாளிகை முழுதும் சிவாஜி நடித்த வசந்த மாளிகை திரைப்படத்தினை போன்று முழுக்க முழுக்க கண்ணாடிகளால் அழகுற அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அது கண்ணாடி பங்களா என்று கடல் கடந்த துாரத்து தேசங்களிலும் புகழ் பரவி இருந்தது. பங்களாவின் சுவர்களின் பதிக்கப்பட்டு இருந்த பலவித வண்ண விளக்குகள் இரவு நேரங்களில் மின்னியப்படி மாயாஜால பிம்பங்களை பிரதிபலித்தது. இங்கு அடிக்கடி விழாக்கள் நடக்கும். இந்த வீட்டிற்கு அரசு அதிகாரிகள் பலரும் வருகை தருவர். இந்த விழாக்களின்போது பொதுமக்களும் வருவர். இயற்கை சூழலில் அமைந்திருந்த இந்த பங்களாவை பொதுமக்கள் சுற்றி பார்க்கவும் அனுமதி தரப்பட்டது. தோட்டத்தை கண்காணிக்க இருந்த கணக்கரிடம் அனுமதி பெற்று எப்போது வேண்டும் என்றாலும் இந்த கண்ணாடி பங்களாவை சுற்றி பார்க்கலாம். சிறுவர்கள், பெரியோர்கள் அங்கிருந்த பம்பு செட் குளிக்க கூட அனுமதி தரப்பட்டது. அதன் பிறகு தோட்டத்தில் ஒரு பகுதி ஆசிரமத்திற்கு குத்தகை விடப்பட்டது. அங்கு காய்கறிகள் பயிரிடப்பட்டு, செழித்து வளர்ந்தன. இதனால் பொதுமக்களுக்கு பழையபடி அனுமதிக்கப்படவில்லை. அடிக்கடி பொதுமக்களுக்கு ஆசிரமத்திற்கு தகராறு ஏற்பட்டது. இருந்தாலும் கால ஓட்டத்தில் கண்ணாடி பங்களாவும் ஆண்டுகளை கடந்து நின்றது. 1965ல் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்தது. இந்த போராட்டம் தீப்பொறியாக புதுச்சேரியிலும் பரவியது. ஆசிரமித்தில் நிறைய பேர் ஹிந்தி பேசும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் புதுச்சேரி மக்களின் கோபம் கருவடிக்குப்பம் கண்ணாடி பங்களா மீது திரும்பியது. ஏற்கனவே உள்ளே அனுமதிக்காத கோபத்தில் இருந்த அவர்கள், அதே உக்கிரத்தில் தாங்கள் ரசித்த கண்ணாடி பங்காளவை அடித்து நொறுக்கினர்.கண்ணாடி மாளிகையில் உள்ளே புகுந்து அனைத்து கண்ணாடிகளையும் சின்னாபின்னமாக்கினர்.எங்கும் கண்ணாடி சிதறல்கள் சிதறி கிடக்க பரிதாபமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலில் தப்பிய ஓரிரு பளிங்கு சிலைகள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் தஞ்சமடைந்தன. புதுச்சேரியில் பெருமை மிகு அடையாளமாக விளங்கிய கண்ணாடி பங்களா இருந்த தோட்டம் பல தலைமுறையாக வீட்டுமனைகளாகி கைமாறி இன்றைக்கு மகாவீர் நகர் என்ற பெயரில் அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டது.
25-Aug-2025