உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு உதவி பெறும் பள்ளி பிரெஞ்சு ரெஸ்டாரண்டாக மாறிய கொடுமை! அரசின் அலட்சியத்தால் நுாற்றாண்டு பள்ளியின் பரிதாபம்

அரசு உதவி பெறும் பள்ளி பிரெஞ்சு ரெஸ்டாரண்டாக மாறிய கொடுமை! அரசின் அலட்சியத்தால் நுாற்றாண்டு பள்ளியின் பரிதாபம்

புதுச்சேரி; ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகை விட்ட கொடுமை புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் துவங்கப்பட்ட பள்ளிகளில், கிறிஸ்தவ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்து மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனைக் கண்ட அப்போதைய பொன்னு முருகேசப் பிள்ளை தலைமையில் 20 இந்து இளைஞர்கள் 1880ம் ஆண்டு பொது தொண்டு சங்கத்தை உருவாக்கினர். அதில், தானமாக கிடைத்த 5,000 சதுர அடி மனையை, 1921ம் ஆண்டு நிர்வாகிகளின் சுயநிதியுடன் 'எக்கோல் இந்து' என்ற பெயரில் இந்து மாணவர்களுக்கான பொது பள்ளியை துவங்கினர். அதுவே, இன்றைய சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி ஆகும். புதுச்சேரி நகரின் மையப்பகுதியான செட்டி தெருவில் கடந்த 104 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. 25 ஆசிரியர்கள் மற்றும் 10 ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். தமிழகத்தில் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பே இப்பள்ளியில் படித்த ஏழை மாணவர்களின் பசியை போக்க காலையில் கஞ்சி வழங்கும் திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக இயங்கி வந்த இப்பள்ளியை, புதுச்சேரி அரசில் கல்வி சட்டம் அமலான 1986ம் ஆண்டு, அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்ற பள்ளி நிர்வாகிகள் கல்வித்துறையை அணுகினர். அங்கிருந்த அதிகாரிகள் பள்ளியின் பெயரில் உள்ள இந்து என்ற பெயரை நீக்கினால் மட்டுமே அரசு உதவி கிடைக்கும் என்று (யாருக்கோ ஆதரவாக) அதிகாரத்தை காட்டினர். ஏழை மாணவர்களுக்காக தங்களால் தொடங்கப்பட்ட இப்பள்ளியின் பெயரில் உள்ள 'இந்து' என்ற வார்த்தையை பள்ளி நிர்வாகிகள் கனத்த இதயத்துடன் நீக்கினர். அதன்பிறகே , அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்றப்பட்டு, 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் பள்ளி செயல்பட்டு வந்தது. புதுச்சேரியின் மிகுந்த பெருமைக்குரிய அடையாளமாக இருந்த இப்பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளாக அரசின் நிதியுதவி சரிவர கிடைக்காததால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலவியது. மேலும், மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல பலன்கள் நிறுத்தப்பட்டன. நிர்வாகிகள் எவ்வளவோ போராடியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சரி வர சம்பளம் கிடைக்காமல் சில மாதங்களுக்கு பிறகு சம்பளம் போடுவது என கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் காலிப் பணியிடங்கள் எதுவும் நிரப்பாததால் தற்போது பள்ளியில் ஒரு பட்டய ஆசிரியர், ஐந்து ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், ரொட்டி பால் ஊழியர் ஒருவர் என 7 பேர் மட்டுமே கல்வித்துறை கணக்கில் உள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்து 285 பேர் மட்டுமே தற்போது படித்து வருகின்றனர். மேலும் நூற்றாண்டை கடந்த இப்பள்ளி கட்டடங்கள் பலகீனமாக உள்ளதால், அந்த கட்டடங்களில் வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். புதுச்சேரியின் பழமைகளில் ஒன்றான சொசியத்தே புரோகிரேசீஸ்த் அரசு உதவிப் பெறும் பள்ளியை சீரமைக்க அரசும் எந்த முயற்சியும் எடுக்காததால், பள்ளி நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டுள்ளனர். இப்பள்ளியை நிறுத்தாமல் எப்படியாவது தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தற்போதைய நிர்வாகிகள் பள்ளிக்கு சொந்தமான வைசியாள் வீதியில் உள்ள விளையாட்டு மைதான கட்டடத்திற்கு வகுப்புகளை மாற்றினர். மேலும் இப்பள்ளிக்கு அரசு நிதியுதவி சரியாக கிடைக்காததால், பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மாதம் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் செலவாகிறது. இதற்கான தொகையை தற்போது உள்ள நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் நன்கொடையாக பெற்றே இந்த செலவினை ஈடு செய்து வருகின்றனர். பள்ளியை சீரமைக்கவும், நிர்வகிக்கவும் போதிய நிதி மற்றும் அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிய இந்த நூற்றாண்டு கண்ட பள்ளி கட்டடத்தை தனியார் உணவக நிறுவனத்திற்கு பத்தாண்டிற்கு பிரெஞ்சு ரெஸ்டாரண்டாக செயல்பட மாதம் ரூ.3.50 லட்சத்திற்கு வாடகைக்கு நிர்வாகிகள் விட்டுள்ளனர். பல ஆயிரம் ஏழை மாணவர்களை கல்வியாளர்களாக உருவாக்கிய பள்ளி, கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பிரெஞ்சு ரெஸ்டாரண்டாக மாறிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆட்சியாளருக்கு பெருமையை ஏற்படுத்துமா?

பா.ஜ., ஆட்சியில் இப்படியா?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி அமைச்சரவையில் நமச்சிவாயம் பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்வித்துறையில், புதுச்சேரியில் முதல் இந்து பள்ளிக்கூடம் என்ற பெருமையுடன் விளங்கிய இந்த பள்ளி பிரெஞ்சு ரெஸ்டாரண்டாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்புவார்களா?

போராட தயாராகும் முன்னாள் மாணவர்கள்

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியை ரெஸ்டாரண்டாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டி, பள்ளி நிர்வாகிகளிடம் நேற்று மனு அளித்துள்ளனர். மேலும், பள்ளியை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ