உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடியால் தாக்கப்பட்ட வியாபாரியை ஸ்டெச்சருடன் கொண்டு சென்று கவர்னர் மாளிகை முற்றுகை

ரவுடியால் தாக்கப்பட்ட வியாபாரியை ஸ்டெச்சருடன் கொண்டு சென்று கவர்னர் மாளிகை முற்றுகை

போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு புதுச்சேரி: மாமூல் கேட்டு ரவுடிகளால் தாக்கப்பட்ட வியாபாரிக்கு சரியான சிகிச்சை அளிக்காததை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான சமூக நல அமைப்புகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, சின்னையன்பேட், ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 38; இந்திரா சிக்னல் அருகில் உள்ள 7 ஹீல்ஸ் பார் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த 3 நபர்கள், தண்ணீர், கூல்ரிங்க்ஸ், சிகரெட் வாங்கினர்.அவர்களிடம் சிகரெட்டிற்கான பணம் தருமாறு சந்துரு கேட்டார். கோபமடைந்த மூவரும், நாங்கள் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா? நாங்கள் எப்போது வந்தாலும் மாமூல் தர வேண்டும் என, மிரட்டி சோடா பாட்டில்களால் சந்துருவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.படுகாயம் அடைந்த சந்துரு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். நேற்று காலை குயவர்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்தார். அங்கு ஸ்கேன் வசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்.இதனிடையே மாமூல் கேட்ட ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் டி.ஜி.பி., அலுவலகம் முன், போராட்டம் நடத்த திரண்டனர். அப்போது, வியாபாரிக்கு சிகிச்சை அளிக்க அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அறிந்து, சமூக அமைப்புகள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து வியாபாரியுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.பெரியக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுகாதாரத்துறை இயக்குநர், அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் இருப்பதால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான சமூக நல அமைப்புகள், காயமடைந்த வியாபாரியை ஸ்டெச்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிச் சென்று கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால், நுழைவு வாயிலில் இருந்து சற்று துாரம் தள்ளி, பாரதி பூங்கா நுழைவு வாயில் முன்பு ஸ்டெச்சரை நிறுத்தினர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டம் நடத்தியவர்கள் சம்பவம் குறித்து விளக்கினர். இதனால் கவர்னர் மாளிகை முன்பு பதட்டமான சூழல் ஏற்பட்டது. சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேள் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். டாக்டர் இல்லாத ஆம்புலன்சில் வியாபாரியை சிகிச்சைக்காக ஏற்றினர்.இதனால் வியாபாரி என்றால் அலட்சியமா, டாக்டர் வந்தால் தான் ஆம்புலன்ஸ்சை எடுத்து செல்ல அனுமதிப்போம் என கூறி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு, ஆம்புலன்ஸ் முன், படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதன் பிறகே வியாபாரியுடன் ஆம்புலன்ஸ் கதிர்காமம் புறப்பட்டு சென்றது. கவர்னரை சந்திக்க வேண்டும் என கூறி போராட்டம் தொடர்ந்தது. சில நிமிடம் கழித்து அங்கிருந்து சட்டசபைக்கு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை