உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிறப்பின் பயனை உணர்ந்ததால் வருவது உய்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

 பிறப்பின் பயனை உணர்ந்ததால் வருவது உய்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி: பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிடைக்கும் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று முன்தினம் மார்கழி மகோற்சவ திருப்பாவை உபன்யாசம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய திருப்பாவையின் 2ம் பாசுரத்தின் உபன்யாசம்: இரண்டாம் பாசுரம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என, சொல்கிறது. இந்த பாசுரத்தை வையத்து வாழ்வீர்காள் என்று துவக்கிய ஆண்டாள் நாச்சியார் உய்யுமாறு எண்ணி உவந்து என்று நிறைவு செய்து வாழ்வின் பயன் உய்வே என்று அருளியுள்ளதே இப்பாசுரத்தின் உயர்வு. ஜீவாத்மாக்களாகிய நமக்கு பிறந்ததின் பயனாக அடைய வேண்டிய முக்கியமான தேவைகள் இரண்டு. ஒன்று ஜீவனம் எனப்படும் வாழ்வு. மற்றது உஜ்ஜீவனம் எனப்படும் உய்வு. இவை இரண்டுமே நமக்கு இரு கண்கள். அவ்விரண்டு கண்களே வாழ்வும் உய்வும். எனவே, வையத்தில் வாழும் ஒவ்வொருவரும் இன்பமுற, நிறை வாழ்வு பெற்று உய்யும் வல்லமை தேவை என்பதைத் தான் இந்தப் பாசுரத்தில் வலியுறுத்துகிறாள் கோதைப் பிராட்டி. ஆக, பிறந்ததால் வருவது வாழ்வு. பிறப்பின் பயனை உணர்ந்ததால் வருவது உய்வு. இந்த உய்வு என்பது பெரும் பதம்; பேரின்பம். பேரின்பம் என்பது துன்பம் சிறிதும் கலவாத இன்பம். அத்தகைய பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிட்டத்தக்கது. அத்தகைய பெரும் பதம் எனும் பேரின்பத்தை இப்புவியில் வாழும் போதே நாம் அடைய முடியும் என்பதை உணர்த்துவதே ஆன்மிக உணர்வு. அதை உணர்ந்து, வாழத் துவங்கி, உய்யவும் தெரிந்து கொண்டால் இந்த வைய வாழ்வே பேரின்பமாகும் என்பதே இந்த 2ம் பாசுரத்தில்ஆண்டாள் பிராட்டி வலியுறுத்திக் காட்டியுள்ள கருத்து. இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

உபன்யாசம் நேரம்

மார்கழி மாகோற்சவ உபன்யாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை தினசரி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி