உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி புதுச்சேரியில் பரபரப்பு

எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கரனை மிரட்டிய ரவுடி மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் திலாஸ்பேட்டை மந்தவெளி ராமு (எ) ரவுடி ராமு, 35; சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.நகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தையும் தாண்டி பல அடி இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் அங்குள்ள மற்ற கடைக்காரர்களுடன் பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாக ஜிப்மர் வணிக வளாக வியாபாரிகள், புதுச்சேரி வியாபாரிகள் சங்க பொறுப்பில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கரனிடம் இதுகுறித்து முறையிட்டனர்.சிவசங்கரன் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜை சந்தித்து, ஜிப்மர் எதிரில் வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கூறினார்.இதையறிந்த ரவுடி ராமு, நேற்று முன்தினம், ரெட்டியார்பாளையத்தில் உள்ள சிவசங்கரன் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, பொதுமக்களிடம் குறைகள் கேட்டு கொண்டிருந்த சிவசங்கரன் எம்.எல்.ஏ.விடம், ''ஜிப்மர் கடை விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். எனக்கு முதல்வரை நன்கு தெரியும். கடை விவகாரத்தில் தலையிட்டால் பலவற்றை சந்திக்க நேரிடும்' என, மிரட்டிவிட்டு சென்றார். அப்போது, என்னை பற்றி எம்.எல்.ஏ.வுக்கு தெரியவில்லை என ஆதரவாளர்கள் மத்தியில் கூறிவிட்டு சென்றுள்ளார்.இது தொடர்பாக சிவசங்கரன் எம்.எல்.ஏ., ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் கலையரசன், ரவுடி ராமு மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரவுடி ராமு மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்கு நிலுவையில் உள்ளன.

சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை, மிரட்டிய ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஜிப்மர் வியாபாரிகள் சங்கம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று கோரிமேட்டில் இருந்து வியாபாரிகள் பேரணியாக புறப்பட்டு கவர்னர், முதல்வர், டி.ஜி.பி., உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ