தடுப்புகளை தாண்டி மக்களை சந்தித்து பேசிய துணை ஜனாதிபதி
புதுச்சேரி: கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த விழாவில் பயனாளிகளிடம் வீடுகளுக்கான சாவியை ஒப்படைத்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், நேராக குமரகுரு பள்ள குடியிருப்பு பகுதிக்கே சென்றார். லிப்ட்டில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன் ஆகியோருடன் முதல் தளம் சென்று, புதிதாக கட்டப்பட் வீடுகளை பார்வையிட்டார். கவர்னர், முதல்வருடன் இணைத்து ஒரு வீட்டில் குத்துவிளக்கேற்றினார். பின் கீழ் தளம் வந்த துணை ஜனாதிபதி, குடியிருப்புவாசிகள் திரண்டு இருப்பதை கண்டு பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி நேரடியாக அவர்களிடம் சென்றார். வீடுகள் எப்படி இருக்கிறது என கேட்டார். அப்போது குடியிருப்புவாசிகள் புதிய வீடுகள் பிடித்து இருக்கின்றது. நன்றாக கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அப்போது கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரியிலேயே இந்த கட்டடம் தான் இப்போதைக்கு உயரமானது. மொத்தம் 40 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. 13 மாடிகளை கொண்டது என தெரிவித்தார். அதை கேட்டதும் ஆச்சரியமடைந்த துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி எப்போதும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்து அனைத்து மாநிலங்களிலும் ஏழைகளுக்கு வீடுகள் கிடைக்க செய்தார் என்றார்.