திருவண்ணாமலை தீபத் திருவிழா போக்குவரத்து மாற்றம்
கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் சிரமமின்றி செல்ல கனரக மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அலுவலக செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 24ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வாகனங்களில் திருவண்ணாமலைக்கு செல்வர். பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக இன்று 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருக்கோவிலுார், மணலுார்பேட்டை மற்றும் சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி நோக்கிச் செல்லும் கனரக, இலகுரக வாகனங்கள் ஆத்துார், வாழப்படி, சேலம், தொப்பூர், தர்மபுரி வழியாக செல்ல வேண்டும். அதேபோல், கடலுாரில் இருந்து வேலுாருக்கு செல்லும் வாகனங்கள் விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு வழியாக செல்ல வேண்டும். விருத்தாசலம், தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி, ஆத்துார், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்ல வேண்டும். திருச்சியிலிருந்து வேலுாருக்கு செல்லும் வாகனங்கள் உளுந்துார்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.