அரசு செயலருக்கு ஓய்வறை தர மறுப்பு சுற்றுலா துறை ஊழியரிடம் விசாரணை
காரைக்கால், : காரைக்காலில், அரசு செயலருக்கு ஓய்வறை தர சுற்றுலாத்துறை ஊழியர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வாக்காளர் பட்டியல் பார்வையாளரான போக்குவரத்து செயலர் முத்தம்மா நேற்று முன்தினம், காரைக்காலில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணியை பார்வையிட்டார்.பின், கலெக்டர் அலுவலகம் பின்னால் உள்ள விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வெடுக்க, அங்கிருந்த சுற்றுலாத்துறை ஊழியர் பரசுராமனிடம் கலெக்டர் அலுவலக அதிகாரி அனுமதி கோரினார். அதற்கு சுற்றுலாத்துறை அதிகாரி, உரிய கடிதம் கேட்டு அறை ஒதுக்க மறுத்துவிட்டார்.அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரி, சுற்றுலாத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியபின், அரசு செயலருக்கு அறை ஒதுக்கப்பட்டது. அதன்பின் அவர் ஓய்வெடுத்துவிட்டு, புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.அரசு செயலருக்கு அறை ஒதுக்க மறுத்த தகவலை அறிந்த கலெக்டர் மணிகண்டன், சுற்றுலாத்துறை ஊழியர் பரசுராமனிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.