சுற்றுலா சைக்கிள் நிறுவன மோசடி; அதிர்ச்சியூட்டும் தகவல்; உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தின் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நிறுவனம் புதுச்சேரி நகராட்சி அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. இந்நிறுவனம் புதுச்சேரியில் மட்டும் இதுவரை 45 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 11 ஆயிரத்து 500 ரூபாய் தற்போது வரை வழங்கி வந்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் தினசரி மூன்று கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு பெற்று வருகிறது.இந்நிறுவனத்தின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த நிஷாத் அகமத் என்பதும், தற்போது அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிறுவன ஊழியர்களும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.இந்த மோசடி குறித்து புதுச்சேரி டி.ஜி.பி., மூலம் பிற மாநில டி.ஜி.பி.,களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாடு முழுதும் உள்ள இந்த நிறுவனத்தின் மற்ற 9 கிளைகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தலைமறைவாகியுள்ள நிறுவனத்தின் உரிமையாளர் நிஷாத் அகமத்தை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.