ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள்...
சுற்றுலாப் பயணிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம், தொடர்வதை கதையாக நடப்பதை தடுக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகைஅதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் விடுதிகளில் இடம் இல்லாமல் நகர வெளிப் பகுதியில் தங்கி வருகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றன. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலில் குளிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். கடலில் இறங்கி குளிக்கும் போது, ஆர்வத்தில் அதிக துாரம் சென்று குளிக்கின்றனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. அலையில் சிக்கி உயிரிழப்பவர்களில் சிலரின் உடல்கள் பல ஆண்டுகள் ஆகியும் கண்டு பிடிக்க முடியாத நிலை இருக்கிறது. போலீசார், கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் லைப் கார்டு பணியாளர்கள் அதிக தொலைவில் சென்று குளிக்க வேண்டாம் என, சுற்றுலா பயணிகளை எச்சரிக்கின்றனர். அதை பொருப்படுத்தாமல், ஆபத்தை உணராமல் கடலில் நீண்ட துாரம் வரை சென்று குளிக்கின்றனர். போலீசாரும் ஒரு கட்டத்தில் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாமல் விட்டு விடுகின்றனர்.கடந்த சுதந்திர தினத்தன்று, பெங்களூருவில் இருந்து சுற்றுலா வந்த 12 பேர், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் குளித்தனர். அதில், பெங்களூரு ஐ.டி., கம்பெனியில் பணி புரிந்த இளம் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் குளித்த 2 பேர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. புதுச்சேரி சுற்றுலாத்துறை கடற்கரையில் பாதுகாப்பை பலப்படுத்தி, உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.