புதுச்சேரியில் 26ம் தேதி டிராக்டர், பைக் பேரணி
புதுச்சேரி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு காங்., விவசாய அணி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செல்வ மணிகண்டன், விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி, சி.பி.எம் பெருமாள், அன்புமணி, சரவணன், புருஷோத்தமன், சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு விவசாயிகளிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்ற எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரியில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணியளவில் டிராக்டர் மற்றும் பைக் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.தியாகிகள் சிலை அருகே துவங்கும் பேரணி மறைமலை அடிகள் சாலை, இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல், காமராஜ் சாலை, அண்ணா சாலை வழியாக சுதேசிமில் அருகே முடிவடைக்கிறது.ஊர்வலத்தில் கிராமப்புறங்களில் இருந்து 50 டிராக்டர்கள், 200 பைக்குகள் பங்கேற்கின்றன. டிராக்டர் ஊர்வலத்தை புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைக்கிறார்.தி.மு.க., விவசாய அணி தலைவர் குலசேகரன் கலந்து கொள்கிறார்.