வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி: வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள், இழப்பீடு பெறுவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு அழைப்பு மையம் அமைத்துள்ளது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் 'பெஞ்சல்' புயலால் டூ-வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அதிக வாகனங்கள் பழுதடைந்ததால், இழப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் இழப்பீடு வழங்குவது மற்றும் பழுது பார்ப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.அதனையொட்டி, கவர்னர் மற்றும் முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், வாகன உரிமையாளர்களின் இழப்பீடு கோரிக்கைகளை தீர்ப்பதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, போக்குவரத்து துறை சார்பில் 0413-2280170 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சேவை டீலர்களின் பணிமனையில், வாகனங்களை நிறுத்துவதில் உள்ள சிரமத்தை போக்கிட, முழுமையாக சேதமடைந்த வாகனங்களை சுதேசி மற்றும் பாரதி மில் வளாகங்களில் நிறுத்திட போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனங்களின் உடனடி ஆய்விற்கும், பதிவு சான்றிதழ்களை ரத்து செய்யவும், போக்குவரத்து துறை ஒரு குழுவை அமைத்துள்ளது.இழப்பீடு கோருபவர்களுக்கு சேவை செய்வதற்காக, மதிப்பீட்டு கணக்கெடுப்பாளர்கள் விரைந்து செயல்படவும், வாகனங்களை விரைந்து பழுது பார்க்க டீலர்களுக்கு மதிப்பிடப்பட்ட தொகையில், குறைந்தபட்சம், 50 சதவீதம் வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உரிமையாளர்களின் இழப்பீடு கோரிக்கைகளை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை 3 மாதங்களுக்கு அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கிய வாகனத்தின் உயரம், மாடல் மற்றும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் பழுது பார்ப்புக்கான மதிப்பீட்டை விரைந்து தயாரிக்கவும், சேவை டீலர்கள் வாகனங்களை விரைவாக பழுது பார்ப்பதற்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க அந்தந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.முழுமையாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட வாகனம் வங்கி கடன் மூலம் பெற்றதென்றால், காப்பீட்டாளர் தகுந்த வங்கியுடன் பேசி வங்கிக்கடனை முன் கூட்டியே அடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.