முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க ஆண்டு விழா
புதுச்சேரி: புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்கத்தின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கவர்னரின் கூடுதல் உதவியாளர் பிரசன்ன குமார், முன்னாள் ராணுவ நலச்சங்கத்தின் மூலம் நினைவு அஞ்சல் தலை வெளியிட, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்தியத் தலைவர் மிஸ்ரா பெற்று கொண்டார். தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் அனில் குமார், பொதுச் செயலாளர் கோபிநாத், சாய் கிருபா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சாய் கார்த்திக், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், ஓய்வூதியம் பெறாத உறுப்பினர்களுக்கு நிதி உதவியும், அதிக மதிப்பெண் பெற்ற முப்படை முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சாதனை படைத்த உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.