தெரு நாய்களுக்கு கருத்தடை; உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
புதுச்சேரி : தெருநாய்களுக்கு கருத்தடை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படுவதாக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, இந்நகராட்சி மூலம் தனியார் நிறுவனத்திற்க்கு 2023ம் ஆண்டு ஒப்பந்தப் பணி ஆணை வழங்கப்பட்டு, 1,111 தெருநாய்கள் பிடிக்கப்பட்டது. 2001ன் படி நாய்களின் இனபெருக்கத்தை கட்டுபடுத்த கருத்தடை மற்றும் வெறிநாய்கடி எதிர்ப்பு மருந்துகள் செலுத்தி, பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்பட்டது. இதற்கிடையில் டில்லி இந்திய விலங்குகள் நலவாரியம், மாற்றியமைக்கப்பட்ட விலங்குகள் பிறப்பு கட்டுபாடு விதிகள் 2023ன் படி, நாய்களுக்கு கருத்தடை செய்ய அறிவுறுத்தியது. அதன்படி, மீண்டும் 3 வருடத்திற்கு தெரு நாய்களுக் கு கருத்தடை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதனால் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, அவை வெறி பிடிக்காமல் இருக்க வெறி நாய்கடி (ரேபிஸ்) தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணிகள் அடுத்த மாதம் முதல் நகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கருத்தடை செய்த நாய்களுக்கும் வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பு ஊசிகள் செலுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நகராட்சி உரிமம் பெறுவது கட்டாயம். உரிமம் பெறாமல் வீடுகளில் நாய்களை வளர்ப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். வளர்ப்பு நாய்கள் நோய் வாய்ப்பட்டு, வயது முதிர்ந்த பின், சரியான முறையில் பராமரிக்காமல் பொது இடங்களில் விடப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் படி குற்றும். எனவே நாய்கள் வளர்ப்போர் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையுடன் சிகிச்சை அளித்து முறையாக பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.