நீர்நிலை கட்டமைப்பு பணிக்கு ரூ.50 லட்சம் மானியம்; உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்
புதுச்சேரி : நீர்நிலை கட்டமைப்பு நிர்மான பணிக்காக, மத்திய அமைச்சகம் 50 லட்ச ரூபாய் மானியமாக உழவர்கரை நகராட்சிக்கு வழங்க உள்ளதாக ஆணையர் சுரேஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு; மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம், நகர்புற நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மழைநீர் சேகரிப்பு மேம்பாடு, நிலத்தடி நீர் மேம்பாடு போன்ற பணிகளை அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறது. இதற்காக, தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்துடன் இணைந்து ஆழமற்ற நீர்நிலை மேலாண்மை 1.0 என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியது. அதனடிப்படையில், சாம் 2.0 என்ற திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர் ஆதாரம் பிரச்னை உள்ள 75 அம்ரூத் நகரங்களில் இந்த முயற்சிகளை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், உழவர்கரை நகராட்சியும் ஒன்று. இந்த திட்டத்தை செயல்படுத்த, தேசிய நகர்புற விவகார நிறுவனம், நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து அனைத்து வழிகாட்டுதலையும் நகராட்சிக்கு வழங்கும். நிலத்தடி நீர் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான தகுந்த இடத்தில் நீர்நிலை கட்டமைப்புகளை அமைக்க பத்து இடங்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்து இப்பணிக்கான வரைபடம் மற்றும் மதிப் பீடு செய்து தேசிய நகர்புற விவகார நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கும். நீர்நிலை கட்டமைப்பு நிர்மான பணிக்காக மத்திய அமைச்சகம் 50 லட்சம் ரூபாய் மானியமாக நகராட்சிக்கு வழங்கவுள்ளது. இந்த தொகை பெறப்பட்ட உடன், பொது ஒப்பந்தம் கோரி, பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் இவைகள் பராமரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.